
மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய வருடாந்த பெருவிழா திருப்பலி இன்று புதன்கிழமை (8) காலை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை , அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்று மறைமாவட்ட ஆயரினால் திருச்சொரூப ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் கிராம மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக குறித்த ஆலயத்தின் திருவிழா கடந்த 2 வருடங்களாக இடம் பெறாத நிலையில் இவ் வருட திருவிழா சிறப்பாக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


