
ஓமான் அரசாங்கம் வழங்க முன்வந்த 3.6 பில்லியன் டொலர் கடனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
கடுமையான டொலர் நெருக்கடியினால், எரிபொருள் கொள்வனவுக்கான ஓமான் அரசாங்கத்திடம் இருந்து, 3.6 பில்லியன் டொலர் எரிபொருள் கடனைப் பெறும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது.
இதுதொடர்பாக நீண்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு இணக்கம் ஏற்படுத்தப்பட்டது. 20 ஆண்டுகளில் மீளச் செலுத்தும் வகையில் குறித்த கடனை வழங்க ஓமான் முன்வந்திருந்தது.
இந்தக் கடனைப் பெற்றுக் கொள்வதற்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் அமைச்சரவையில் அனுமதியும் பெறப்பட்டது.
எனினும், ஓமான் விதித்த நிபந்தனைகளை தற்போது ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், அந்தக் கடனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
“ஓமானின் நிபந்தனைகள் குறித்து சில கரிசனைகள் காணப்பட்டன. இந்த தருணத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
கடந்த வருடம் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் போது அது சிறந்த யோசனை என நினைத்தோம், ஆனால் தற்போது அது நடைமுறைப்படுத்த முடியாத யோசனைiயாக காணப்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஓமான் விதித்த நிபந்தனைகள் தொடர்பாக அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அதேவேளை, 3.6 பில்லியன் டொலர் கடனுக்கான வட்டிக்கு ஈடாக, மன்னார் கடற்படுகையில் எண்ணெய் அகழ்வுத் தொகுதியை வழங்க வேண்டும் என ஓமான் கோரிக்கை விடுத்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.


