
இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் 2000 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருளை 3000 ரூபாவிற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கார், வேன், ஜீப்புகளுக்கான எரிபொருளை 8,000 ரூபாவுக்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பஸ், லொறி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளில் தட்டுப்பாடு நிலவுவதாக தாங்கி ஊர்திகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பொலனறுவை எண்ணெய் முனையத்திற்கு சென்றிருந்த போதிலும் அங்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்கவில்லையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதேவேளை எரிபொருளுக்கான வெளிப்படையான விலைச் சூத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவது இலாபம் ஈட்டுவதற்காக அல்ல என்றும் நட்டத்தைக் குறைப்பதற்காகவே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.எரிபொருள் விற்பனையின் மூலம் தொடர்ந்தும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்து வருவதாக நாடாளுமன்றில் தெரிவித்த அமைச்சர் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தின் பின்னரும் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துக்கு 1613 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


