
இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூரும், பேரணி ஒன்று கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.
இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்காக, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள், நேற்று முற்பகல், கொழும்பு காலிமுகத்திடல் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத் தளத்துக்கு முன்பாக ஒன்று கூடி, நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்துக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதையடுத்து, காலி முகத்திடல் கடற்கரையில் மலர் தூவப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு, காலிமுகத்திடலில் பேரணியும் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் வகையில், வன் கோல்பேஸ் விடுதி முன்பாக, மெழுகுவர்த்தி ஏற்றல் நிகழ்வுடன் இந்தப் பேரணி தொடங்கியது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதாதையுடன் இறந்தவர்களுக்கு நீதி கோரி பேரணியை ஆரம்பித்தனர்.
இந்தப் பேரணி காலிமுகத்திடல் போராட்டம் நடைபெறும், மையமான ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக நிறைவு பெற்றது.
ஊர்வலத்தில் ஈடுபட்டோர், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி நினைவேந்தல் உரைகளையும் நிகழ்த்தினர்.


