
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும் எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மக்களை ஒடுக்கி அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகளைப் பாதுகாக்கும் சில முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது. அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் தற்போதைய விலையை விட குறைவாக உள்ளதாகவும் இந்த சம்பவம் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 121 ரூபா 19 சதத்திற்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடு தற்போது எண்ணெய் விலை உயர்வு மற்றும் பாரிய பொருளாதார பேரழிவை எதிர்கொண்டு வரும் நிலையில் அரசியல்வாதிகளுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குறைந்த விலையில் எரிபொருளை வழங்குவது எவ்வாறு நியாயமாகும் என மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தனது முகநூல் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸ் கராஜில் இருந்து எரிபொருள் கொடுப்பது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.


