
கடந்த 70 ஆண்டுகளில், மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையினால், வரலாற்றில் முதல் தடவையாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செலுத்தப்படாத கடனுக்கான வட்டித் தொகையான 78 மில்லியன் டொலரை, 30 நாள் சலுகைக் காலத்திற்குப் பின்னர், செலுத்துவதற்கான கால எல்லை, புதன்கிழமையுடன் காலாவதியாகியுள்ளது.
தற்போது நாடு முற்கூட்டிய தவறு நிலையில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடனாளிகளுக்கு அரசாங்கம், சில அல்லது அனைத்து கடன்களையும், செலுத்த முடியாமல் போகும் போது இந்த தவறு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது ஒரு நாட்டின் நற்பெயரை சேதப்படுத்துடன், சர்வதேச சந்தைகளில் தேவைப்படும் பணத்தை கடனாகப் பெறுவதையும் கடினமாக்குகிறது.
அத்துடன், நாட்டின் நாணயம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் தற்போது பணவீக்கம் 30 வீதம் அளவில் உள்ளது என்றும், அது இன்னும் சில மாதங்களில் 40 வீதமாக உயரும் எனவும், அவர் மேலும் எச்சரித்துள்ளார்.


