
மகிந்த ராஜபக்ச இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“அரசியலில் ஈடுபடும் போது எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
இல்லை என்றால், நாட்டில் அண்மைய நடந்த்து போன்ற அவலங்கள் நடக்கும்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கான சிறந்த தருணத்தை அறிந்து கொள்ள ஒரு அரசியல்வாதிக்கு உணர்வு இருப்பது மிகவும் அவசியம்.
மே 9ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து சென்று, காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை தாக்கியவர்கள், யாரோ ஒருவரால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.
1930களில் ஆரம்பித்த ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் பயணம் தற்போது ஒன்பது தசாப்தங்களை கடந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட எங்கள் சொத்துக்களை அடகு வைத்துள்ளோம். இன்னும் சில சொத்துக்கள் அடகு வைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றை முழுமையாக விடுவிக்க முடியவில்லை.
நேர்மையான நோக்கத்துடன் அரசியலில் ஈடுபட்டோம். அதனால்தான் நாங்கள் இன்னும் நாட்டில் அரசியல் களத்தில் இருக்கிறோம்.
முன்னாள் பிரதமர் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் நன்றாக இருந்திருக்கும்.
அவர் அதைச் செய்யாததன் விளைவாக, அனைத்தும் அழிந்து விட்டன.
அரசியலுக்காக நாங்கள் செய்த தியாகம் முற்றிலும் வீணாகி விட்டது,.
நமது தர்மத்தின்படி, சில சமயங்களில் விட்டுக்கொடுப்பதற்குப் பழக வேண்டும்.
பதவிக்காக நாம் பேராசை கொண்டால், இவ்வாறான நிலைமைகளை நாம் சந்திக்க நேரிடும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் அதிர்ஷ்டசாலி. 2015ல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமலே, பிரதமரானார்.
இன்று ஒரே ஆசனத்தை வைத்துக் கொண்டு மீண்டும் பிரதமராகியுள்ளார்.
அவருக்கு சர்வதேச ஆதரவும் நற்பெயரும் உள்ளது. அவருடன் ஒன்றிணைந்து செயற்படுவோம், சபையில் ஒழுக்கத்தைப் பேணுவோம்.
அதனால் நெருக்கடிகளுக்கான தீர்வுகளை நாம் கொண்டு வரலாம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


