deepamnews.lk
ஆன்மீகம்

முருகப்பெருமானின் வித்தியாசமான ஆலயங்கள்!

banner

தமிழ் கடவுளாக அனைவராலும் போற்றப்படும் முருகப்பெருமானுக்கு ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளது.அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாவது படைவீடாகத் திகழ்வது திருச்செந்தூர். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் ஆலயத்தின் கொடிமரத்தில் இருந்து வலது பக்கமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் சென்று வந்தால், அந்த சுற்றுப்பாதையானது ‘ஓம்’ என்ற வடிவில் அமைந்திருப்பதை அறியலாம். இந்தக் கோவிலில் தங்கக்குடங்கள் இருக்கின்றன. இவை ஆலயத்தில் வேள்வி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறும் காலத்தில் மட்டும் பயன் படுத்தப்படுகின்றன. அதேபோல் தங்க தேங்காய்களும் இங்கே உள்ளதாம்.

மயில் மீது அமர்ந்தமுருகன்
திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம். ‘வக்ரன்’ என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலத்திற்கு ‘வக்கரை’ என்று பெயா் வந்தது. இங்கே வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறு முகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார்.

சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன்
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழித்தடத்தில், சென்னை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, சிறுவாபுரி என்ற ஊர். இங்கு அருள்புரியும் முருகப்பெருமானும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இங்கு அமைந்துள்ள முருகன் கோவிலில் உள்ள இறைவன் ‘வள்ளி மணவாளப் பெருமான்’ என்று அழைக்கப்படுகிறார். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் அருளும் முகப்பெருமான் ‘கல்யாண முருக’ராக அருள்பாலிப்பது கூடுதல் விசேஷம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், விரைவிலேயே அந்தத் தடை விலகி திருமணம் நடந்தேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தல முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சொந்த வீடு கட்டும் கனவும் நனவாகும் என்கிறார்கள்.

அதிகார முருகன்
சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்ரோடு வழியில் பொன்னேரி சாலையில் இருக்கிறது, ஆண்டார்குப்பம் என்ற ஊர். இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் முருகப்பெருமான், அதிகாரத் தோரணையில் அருள்பாலிக்கிறார். பிரம்மனிடம் பிரணவத்திற்கு பொருள் கூறும்படி, தன்னுடைய இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்கும் அதிகாரத் தோரணையில் இந்த முருகன் காட்சியளிக்கிறார். இதனால் இவரை ‘அதிகார முருகன்’ என்றும் அழைப்பார்கள். பிரணவத்திற்குப் பொருள் தெரியாத காரணத்தால், பிரம்மனை சிறையில் அடைத்ததோடு, அவர் செய்து வந்த படைப்புத் தொழிலையும், முருகப்பெருமானே செய்து வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றியதாலும் இவரை `அதிகார முருகன்’ என்று சொல்கிறார்கள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அதிகாரம் நிறைந்த பதவிகளை இவர் வழங்குவதாக ஐதீகம்.

banner
banner
banner

Related posts

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் தரும் தாரமங்கலம் கோவில்.

Deepam News

திங்கட்கிழமை விரதத்தால் இவ்வளவு நன்மைகளா!!!

Deepam News

துளசியால் காப்பாற்றப்பட்ட உயிர் !!!

Deepam News

Leave a Comment