
உடனடியாக பணிக்கு சமூகமளிக்காவிட்டால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம் இன்று அறிவிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களை செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் திறப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 26ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் வெளிநாட்டுத் துறையில் கணிசமான எண்ணிக்கையில் தபால் பைகள் குவிந்துள்ளதால் தபால் துறைக்கு இரண்டு கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


