கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று குடியரசு தினவிழா கருத்தரங்கத்தில் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் ‘அரசமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் காத்திடுவோம்: தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைமசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிட வலியுறுத்துவோம்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு‘ஜனநாயகம் காக்க ஒன்றிணைவோம்’, ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு உருவாகிவரும் சவால்கள்’ ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தலைவர்பி.ரத்தினசபாபதி, பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ்பாபு, மத்தியக் கல்விஆலோசனைக் குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் அனில் சட்கோபால், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கனிமொழி பேசியதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டும். நாட்டில் மக்களின் பேச்சுரிமைகள் பறிக்கப்படுகிறது. ஒரு சமூகத்தில் ஒருவர் சொல்லும் எந்த கருத்தாக இருந்தாலும் அதுகட்டாயம் யாரையாவது புண்படுத்தும். புண்படுத்தாமல் யாராலும் கருத்து சொல்ல முடியாது. புரிந்துகொள்ளுதல் என்ற நிலை உருவாகும்போது தான் சமூகத்தில் மாற்றங்கள் வரும். இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.
தற்போது, யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தேர்ந் தெடுக்கக்கூடிய உரிமைகூட மக்களுக்கு இல்லை. 30 வருடத்தில் 50 சதவீத உயர் கல்விக்கான நிலையை இந்தியாவில் உருவாக்கிவிட வேண்டும் என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர். தமிழகம் இந்த இலக்கை எப்போதோ தாண்டிவிட்டது.
தமிழகத்தில் இருக்கக் கூடிய தேவைகள், பிரச்சினைகள் என்னஎன்பது மத்திய அரசுக்குத் தெரியாது. எங்கள் மாணவர்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத்தான் தெரியும். அவர்களின் எதிர்காலத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். எனவே, கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.