deepamnews
இலங்கை

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறு 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும் தமிழ் அரசியல் நிலையை ஜனநாயக ரீதியில் நிர்ணயித்துக்கொள்வதை முன்னிறுத்தி சுதந்திரமான சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்விற்காக இதனை முன்னெடுக்குமாறு 6 அமைப்புகளும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

 உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், இலங்கையின் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு, ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் நடவடிக்கை குழு, உலகத்தமிழர் அமைப்பு ஆகிய 6 அமைப்புகளே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கூட்டாக கடிதமொன்றை அனுப்பியுள்ளன.

புத்தாண்டு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வருவதைப் போன்று, இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காங்கிரஸை வலியுறுத்துவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு கொண்டுவரப்பட்ட யுத்தம், தமிழ் மக்கள் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், இறுதிக்கட்ட போரின்போது, சுமார் 1,46,679 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கருத்து தெரிவித்திருந்ததுடன்,
‘இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியிருப்பதாக’ அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை சுதந்திரமாக நிர்ணயித்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் விவகாரத்தில், சர்வதேச சட்டங்கள் அனுசரிக்கப்படுவதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறித்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இவ்வாறான பின்னணியில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதை முன்னிறுத்திய அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் பயன்படுத்துமாறும், இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாக  6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸிடம் கோரியுள்ளன.

Related posts

நாட்டில் மக்கள் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள போதும் பல மில்லியன் ரூபாய் செலவில் சுகந்திரதினம் வேண்டுமா?

videodeepam

மத்தியஸ்த்தம் இன்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில் எந்த பலனும் இல்லை – சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு 

videodeepam

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி !

videodeepam