சர்வதேசத்துக்கு அரசியல் தீர்வு வழங்குவதாக தொட்டிலை ஆட்டிக்கொண்டு கொண்டு பிள்ளையைக் கிள்ளி சிங்கள பேரின வாதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூண்டி விடுகிறார் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் குற்றம் சுமத்தினார்.
மீளப் பறிக்க முடியாத வகையில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றும் அதுதான் எமது மக்களுக்கான கௌரவ தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒற்றையாட்சி முறைமைக்குள் தான் அரசியல் தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவது இந்த நாட்டை ஒருபோதும் உருப்பட வைக்காது .நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டுமானால் பிளவுப்படாத நாட்டுக்குள் சமஷ்டி ஆட்சி முறையில் தீர்வு வழங்க வேண்டும்.
போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அமைதி வழி போராட்டத்தை ஆயுத போராக மாற்றியமைத்தார். அவரின் போர் பிரகடனமே இன்று நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.