திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரஜைகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது.
தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற வாத பிரதிவாதங்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
தேர்தலை திட்டமிட்டவாறு நடத்துமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பிரஜைகளுக்கு காணப்படும் வாக்களிக்கும் உரிமை இந்த நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருப்பதைப் போன்று மக்களும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். மார்ச் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அதற்கமைய சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலுக்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதாக ஆணைக்குழு நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளது.
எனவே தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற வாத பிரதிவாதங்கள் நிறைவுக்கு வந்துள்ளன.
எவ்வாறிருப்பினும் தேர்தலுக்கு நிதி இல்லை என்று கூறுவது பாரதூரமானதொரு விடயமாகும். ஜனநாயக நாடொன்றில் இவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று எவராலும் கூற முடியாது.
200 மில்லியன் ரூபா செலவில் தேர்தலை நடத்துவதற்கும் , 37 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கும் , மேலதிகமாக இரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கும் அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது.
ஆனால் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கு பணம் இல்லை என்கிறது. இது அடிப்படையற்றதாகும் என்று தெரிவித்துள்ளார்.