நாடாளுமன்றத்தில் தான் அதானி குறித்து பேசும் போதெல்லாம் பிரதமர் மோடியின் கைகள் நடுங்குவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டுக்கு நேற்று வருகை தந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டன. நான் யாரையும் அவமதிக்கவில்லை. ஆனாலும், நான் கூறியதற்கு ஆதாரம் காட்டுமாறு பாஜகவினர் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, எனது உரையில் நீக்கப்பட்ட பகுதிகளுக்கும் சேர்த்து அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்து மக்களவை சபாநாயகருக்கு ஆதாரத்துடன் கடிதம் எழுதியுள்ளேன்.
அதானிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான தொடர்பு குறித்து இந்திய மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். அதனால்தான் இந்த விஷயத்தை நான் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். மோடியுடன் சேர்ந்து அதானி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த போதெல்லாம், அதானிக்கு அந்நாடுகளின் ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கின்றன. அது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார்.