சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மார்ச் மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் வங்கிக் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு காரணமாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
எரிபொருள் விலை, மின் கட்டணம், இயந்திரப் பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்து உற்பத்தி மற்றும் நிர்வாக செலவுகள் உயர்ந்துள்ளதால், அரிசியின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. தற்போதைய நெல் உற்பத்தி விலையுடன் ஒப்பிடும்போது, சந்தையில் தற்போதுள்ள அரிசி விலைக்கு தமது உற்பத்திகளை விற்பனை செய்தால் நட்டம் ஏற்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி, நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு சகல விதமான நிவாரணங்களையும் வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.