கச்சதீவு உள்ளிட்ட இடங்களில் புத்தர் குடியேறி இடம்பிடிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடும் நிலையில், கோட்டபாயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மிக முக்கியமான வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெடுக்கு நாறி எனும் பகுதியிலே நீண்ட நெடுங்காலமாக வரலாற்று ரீதியிலே சைவத்தமிழ் பாரம்பரியத்தோடு ஆதி சிவனை வழிபட்டு வந்த மூதாதையரும் அந்த பரம்பரையும் அந்த மண்ணில் இருக்கின்றார்கள்.
அவ்வாறா வெடுக்குநாறி சிவனாலயமும், அந்த சிவனாலயத்தின் பரிபாலய தெய்வங்களான அம்மன், பிள்ளையார், வைரவர் போன்ற கடவுள்களுடைய சிலைகளும் அடித்து உடைத்து சிதைக்கப்பட்ட விடயத்தை நாங்கள் பார்க்க கிடைத்தது.
மிக முக்கியமாக வெடுக்குநாறி மலை என்பது தொல்பொருளிற்குரியதென்றும், அங்கு யாரும் பிரவேசிக்க வேண்டாம் என நீதிமன்றம் கட்டளையிட்டதற்கு அமைவாக அந்த ஆலயத்தை பூசித்தும், பராமரித்தும் வந்த பூபால் ஐயாவும், ஏனைய பூசகர்களும் அந்த இடத்திற்கு செல்ல முடியாமல் அவர்கள் வேதனைப்பட்டுக்கொண்டு நீதிமன்ற கட்டளையை மதித்து நடந்தார்கள்.
அவர்கள் மீதுதான் பிக்குமாரும், தொல்பொருள் திணைக்களமும் அவ்விடத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அதையெல்லாம் தாண்டி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளித்து அவர்கள் அந்த இடத்திற்கு செல்லாது இருந்தபொழுது, அந்த இடத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு தரப்பினர் அவ்விடத்திலிருந்த ஆதி சினனுடைய சிவலிங்கத்தையும், அம்மன், பிள்ளையார், வைரவர், முருகன் சிலைகளையும் சிதைத்து தூக்கி எறிந்திருக்கிறார்கள்.
இது இந்த நாட்டில் மிகவும் கேவலமான செயல். தாங்கள் செய்த கர்மம் என்பது கோட்டபாயவின் காலத்தில் அவருக்கு வெளிப்பட்டிருந்தது. அதனைத்தாண்டி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவில் காலத்திலும் கரும வினைகளை அவர்கள் சந்திக்கப்போகின்றார்கள்.
இதிலே, அரசியல், கருத்து வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு நாங்கள் சைவத்தமிழர்கள், இந்துத்தமிழர்கள் எல்லோரும் இணைந்து பிடுங்கப்பட்ட சிலைகளை அங்கு கொண்டு சென்று அதனை பிரதிஸ்டை செய்து தொடர்ந்தும் அந்த இடத்தில் வழிபாடுகள் இடம்பெறும் வகையில் எங்களுடைய செயற்பாடுகள் அமைய வேண்டும் என நான் வேண்டி நிற்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.