deepamnews
இலங்கை

சிறுவர் இல்லங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை

அரச மற்றும் தனியார் சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கான வழிமுறையொன்றை தயாரித்து , அதன் ஊடாக இனங்காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அண்மையில் ரக்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் 11 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன.

அந்த செய்திக்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த சிறுவர் இல்லம் தொடர்பில் கண்காணிப்பினை முன்னெடுத்திருந்தது.

இதன் போது இனங்காணப்பட்ட காரணிகளுக்கமைய பெற்றோரின் பாதுகாப்பினை இழந்த நிலையில் , இது போன்ற சிறுவர் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடந்த திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

இவ் விசேட கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் ரோஹினி மாரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்ட காரணிகளுக்கமைய முதற்கட்ட நடவடிக்கையாக சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார் சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கான வழிமுறையொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து , அதற்குரிய தீர்வுகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இரு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளின் முன்னேற்ற அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் இதன் போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலை

videodeepam

நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

இலங்கையை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

videodeepam