யாழ். மாவட்டத்திலுள்ள அழிக்கப்படும் முக்கியமான வளங்களில் ஒன்றான பனை வளத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிவுரை வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் தீவகப் பகுதிகளில் பனைவளம் அழிக்கப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அபிவிருத்தி குழு தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மேலும் தெரிவிக்கையில், அல்லப்பிட்டியில் தனியார் ஒருவரால் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை கட்டுவதற்காக இரவோடு இரவாக 200 பனைகள் தறித்து எரிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது எழுவைதீவு பகுதியில் தனியார் காணிகளில் உள்ள பனைகள் தறிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்போது அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் ஊக
தேவானந்தா, பனை அபிவிருத்தி சபை அதிகாரியை பதிலளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதன் போது பதில் அளித்த பனை அபிவிருத்தி சபை அதிகாரி, கடந்த வருடம் 10ஆயிரம் பனைகளை தறிப்பதற்கான கோரிக்கைகள் தமக்கு கிடைக்கப் பெற்றதாகவும் அதில் 3ஆயிரம் கோரிக்கைகளை நிராகரித்ததாகவும் 7 ஆயிரம் பனைகளை தறிப்பதற்கான அனுமதியை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கேள்வி எழுப்பிய அமைச்சர் 7ஆயிரம் பனைகளை தறிக்க ஏன் அனுமதி வழங்கினீர்களே என கேட்டார்.
இதன்போது பதிலளித்த அதிகாரி, சிலர் வீட்டு திட்டங்களுக்காக தமது சொந்தக்காணியில் உள்ள பனைகளைத் தறிப்பதற்கு அனுமதி கேட்டார்கள் சிலர் தமது தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறிப்பதற்கான அனுமதி கேட்டார்கள் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஊர்காவற்துறை துறை பிரதேச செயலாளர், சிலர் தமது தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறிக்க விண்ணப்பிக்கிறார்கள் அனுமதி தராவிட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு செல்ல போகிறோம் என கூறுகிறார்கள் என்றார்.
இதன் போது பதில் அளித்த அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் எவ்வாறு நடந்ததோ அது தொடர்பில் எனக்கு தெரியாது இனிமேல் சொந்தக் காணி எனக் கூறி பனை வளத்தை தேவையற்ற விதத்தில் அழிப்பதற்கு இடம் அளிக்க முடியாது.
ஆகவே யாழ். மாவட்டத்தின் பனை வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்கள், பனை அபிவிருத்தி சபை ஆகியோரிடம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதிபன் (நிர்வாகம் ) பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாண சபை அமைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொது அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.