நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலம் முன்வைக்கப்படும் விடயங்கள் இதுவரையில் எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படவில்லை எனவும் இதற்கு பின்னரும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக இந்த விசாரணை நடுநிலையாக நடத்தப்படும் என எதிர்பார்க்க முடியாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.
எனவே சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, முறையான விசாரணைகளே அவசியம் என்றும் அதற்கமைவாகவே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்றம் ஒன்றே தற்போது நாட்டில் உள்ளது. இந்த நாடாளுமன்றம் தொடர்பில் நாட்டு மக்களிடத்தில் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.
அதேபோன்று தான் சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் பிரேணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு கிடைத்து விட்டதா?
மருந்து தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதா? மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை தடுக்கப்பட்டுள்ளதா?
தரமற்ற மருந்துகள் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நியாயம் கிடைத்துள்ளதா? இல்லை. எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை.
நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் ஆதரவு மூலம் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. அது மாத்திமே இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து துன்பப்படும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 காணொளி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம் என்ன? இதனூடாக சர்வதேச சமூகம் என்ன எதிர்பார்க்கிறது? இந்த தாக்குதலின் பின்னணியில் சந்தேகங்களும், குழப்பங்களும் காணப்படுகிறது.
இதனை ஆராய வேண்டியுள்ளது. இதில் பாரிய பொறுப்போன்று இருக்கிறது. தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நீண்ட நாட்கள் கடந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க பெற வேண்டும். குறிப்பாக இந்த செய்தியை வெளிப்படுத்தியவர்கள் மீது சாடுவதை நிறுத்தி விட்டு அதில் என்ன விடயம் கூறப்பட்டுள்ளது என கண்டறிந்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.
நாட்டு மக்கள், சர்வதேசம் நம்ப கூடிய நியாயமானதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணையே மேற்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைத்து இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பல விசாரணைகள் மறைக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மையும் கூட. இவற்றின் மூலம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.