நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றில் முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகர உயர்ந்த நீதிதுறையின் நீதிபதி தொடர்பாக விமர்சித்த நிலையில் அதற்கு ஜனாதிபதியோ பாதுகாப்பு துறை சார்ந்தவர்களோ சட்டமா அதிபர் திணைக்களமோ நடவடிக்கை எடுக்காததே முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு தப்பிச் செல்ல காரணமென அடக்குமுறைகளுக்கு எதிரான ஐனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
1983 ம் ஆண்டு இனப்படுகொலை சிங்கள அரசின் அமைச்சராக இருந்தவர் தான் இன்றைய
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஆனால் இதுவரை யாருக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நாடு தமிழர்கள் வாழ முடியாத நாடு.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு வழக்குகளில் பிரதிவாதியாக உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார். அது தவறு. நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக எந்தவித தனிப்பட்ட குற்றச்சாட்டும் கிடையாது.
அவ்வாறு இருந்தால் அவர் நீதிபதியாக இருக்க முடியாது.
குருந்தூர்மலையில் ஆதிசிவன் மலை தொடர்பான வழக்கில் நீதி வழங்கினார். நீதிபதி தமிழர் என்பதால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.
ஊடகங்களை சுதந்திரமாக இயங்கவிடமால் செய்ய அரசு பயங்கரவாத சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது.
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தகவல்களை வெளிக் கொண்டு வருவதை அச்சுறுத்த ஐனாதிபதி உள்ளிட்ட அரசு முயற்சிக்கிறது.
நீதிபதி நீதியை வழங்கியபோதும் பொலிஸ் திணைக்களம் அதனை நடைமுறைப்படுத்த தவறியிருக்கிறது – என்றார்.