நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புதிய வருமான மார்க்கங்களை உருவாக்குவதற்கான உத்திகளைக் கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் காணப்படும் வருமான மார்க்கங்களை முறைமைப்படுத்துதல், புதிய வருமான மார்க்கங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கான குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்டகால யோசனைகளை உள்ளடக்கி ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி பெற்றுக்கொள்ளப்படவேண்டிய தேவை உள்ள போதிலும், அரச செலவின கட்டமைப்பிற்குள் அவ்விடயம் இடம்பெறுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச வருமானத்தை மறந்து செயற்படுவது மாத்திரமின்றி, எந்தவொரு பிரதிபலனும் அற்ற செயற்பாடுகளுக்காக அரச நிதி வரையறையின்றி செலவிடப்படுகின்றமையும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.