இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து நன்மையடையும், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கையின் நம்பிக்கையானது இணைப்புப் பாதைகள், பாலங்கள், குழாய் கட்டமைப்புகள், மின்சார பரிமாற்ற கட்டமைப்பு, விமான சேவை உட்கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் ஆற்றலில் தங்கியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு இலங்கைக்குள்ளேயே எட்டப்பட வேண்டும் எனவும் The Hindu-விற்கு வழங்கிய நேர்காணலில் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் வளர்ச்சியடைய நிலத்தொடர்பு மிகவும் அவசியமானது எனவும் இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் நிவர்திக்கப்படும் பட்சத்தில், இங்கிலாந்திற்கும் ஐரோப்பாவிற்குமிடையிலான சுரங்கப்பாதை போன்ற இணைப்பு, சாத்தியமான எதிர்கால திட்டமாக அமையுமெனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது கடல், வான், எரிசக்தி, வர்த்தகம், மக்களிடையேயான தொடர்புகளை உள்ளடக்கிய “பொருளாதார ஒத்துழைப்பு தொலைநோக்கு” அறிக்கை வௌியிடப்பட்டதாக மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்விற்கான 13 ஆவது திருத்தம் தொடர்பான புதிய முன்மொழிவுகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.