தைவான் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட 42 சீன போர் விமானங்களினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தைவானை தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாக சீனா கூறி வரும் நிலையில், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல்வழி ரோந்து பணிகள் மற்றும் இராணுவ பயிற்சிகளை தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தைவானின் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனா பயிற்சியில் ஈடுபட்டுள்ளமைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், தைவான் நாட்டிற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவுகரம் நீட்டியுள்ளதுடன், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், எங்களது ஆயுத படைகள் 42 சீன போர் விமானங்களை கண்டறிந்துள்ளது.
அவற்றில் கே.ஜே.-500, ஒய்-9, ஜே-10, ஜே-11, ஜே-16, சூ-30 உள்ளிட்டவையும் அடங்கும். இவற்றில் 26 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் இடைக்கோட்டை கடந்து சென்றுள்ளன. இவை தவிர 8 கப்பல்களுடன் சேர்ந்து விமானங்கள், கூட்டு ரோந்து பணியையும் மேற்கொண்டுள்ளன.
இவற்றை எங்களுடைய விமானம், கப்பல் மற்றும் தரை சார்ந்த ராக்கெட் சாதனங்களை கொண்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என அந்த தகவல் தெரிவிக்கின்றது.
சீனாவின் சமீபத்திய இந்த இராணுவ பயிற்சிகளுக்கு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், தூண்டிவிடும் அணுகுமுறையை சீனா கடைப்பிடிக்கின்றது எனவும் கூறியுள்ளது.