கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது.
யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த கண்காட்சி நாளை(02) மற்றும் நாளை மறுநாள்(03) என மூன்று தினங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில்
பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், அமைச்சின் செயலாளர், திணைக்கள தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் வகையில்,
இலங்கையில் உள்ள 20 தொழிற்சாலைகளில் 300க்கும் மேற்பட்ட காட்சியறைகளில், புத்தாக்கங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் மற்றும் வடமாகாணத்திற்கே உரித்தான பல கைத்தொழில்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குறித்த கண்காட்சியில் காணலாம்.