ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (12) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பயணிகள் ரயில் சேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் ரயில்வே திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் திங்கிட்கிழமை நள்ளிரவு முதல் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால் நேற்று பயணிகள் ரயில் சேவை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியது. நேற்று மாத்திரம் சுமார் 166 பயணிகள் ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டன.
அதிக சனநெரிசலுடன் பொதுமக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்தியிருந்தனர். ரயிலில் பாதுகாப்பற்ற விதத்தில் பயணம் செய்த மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் ரயிலில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோது, ரயில் சாரதிகள் சங்கத்தின் போராட்டம் முறையற்றது.
இதனால் பொதுமக்கள் முகங்கொடுத்த அசௌகரியங்கள் மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு ரயில் சாரதிகள் பொறுப்புக்கூறவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ரயில் சேவையை அத்தியாவசியசேவையாக உடனடியாகப் பிரகடனப்படுத்துமாறு தான் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் வலியுறுத்தினேன் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ரயில் சேவையை அத்தியாவசியசேவையாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.