இலங்கைக்கு முதன் முறையாக வருகை தந்துள்ள இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கான மூன்று நாள் விஜயம் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடுவதைக் குறிக்கும் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்றையதினம் இலங்கை நடாத்தவுள்ள 23ஆவது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் இப்பிராந்தியத்திற்கான இங்கிலாந்தின் நீண்டகால அர்ப்பணிப்பை அமைச்சர் ட்ரெவெலியன் வலியுறுத்துவார் என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
23ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையான காலப்பகுதிக்கான இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் தலைமைப் பதவியை இலங்கை ஏற்கவுள்ளது.
வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில், சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஆறு முன்னுரிமைப் பகுதிகளில் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.