தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆயுதம் ஏந்தியிருக்கா விட்டால் இலங்கையில் தமிழினம் இல்லாமல் போயிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்துக் கூறிய அவர், மாவீரர்களின் தியாகங்கள் தமிழினத்தின் வேர்களாக மாறியுள்ளதென தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று ஓரளவுக்கேனும் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அல்லது தமிழர்கள் இங்கே இன ரீதியாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு கொண்டு சேர்த்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் போராட்டம் தான்.
அந்த ஆயுதப் போராட்டத்தின் அடிப்படையில் தான் இன்று நாங்கள் ஓரளவு கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால், இன்று பல்வேறுபட்ட வரலாற்றுச் சான்றுகளை அழிக்கின்ற, சட்ட ரீதியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிகழ்ச்சி நிரல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.
அதனை எதிர்த்து வெகுஜன ரீதியில் நாங்கள் முழுமையாகப் போராடினால் மாத்திரம் தான் எங்களுடைய இனச் சான்றுகளை – வரலாற்றுச் சான்றுகளை நாங்கள் அழிவதிலிருந்து தடுத்து நிறுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.