குருணாகலிலுள்ள நெல் களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல் போயுள்ள நெல் தொகையின் பெறுமதி 65 மில்லியன் ரூபா என நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
நெல் தொகை காணாமல் போனமை தொடர்பான இறுதி அறிக்கை விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நாளை (02) கையளிக்கப்படவுள்ளது என சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட குறிப்பிட்டுள்ளார்.
நிக்கவெரட்டிய மற்றும் மஹவ நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் கிலோ கிராம் நெல் காணாமல் போயுள்ளது.
பொல்கஹவெல நெல் களஞ்சியசாலை நேற்று (31) பரிசோதிக்கப்பட்டது.
குருணாகலிலுள்ள களஞ்சியசாலைகளில் நெல் தொகை காணாமல் போனமை தொடர்பில் குறித்த களஞ்சியசாலைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.