மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரங்களுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பரப்புகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது குறித்த கடற்பிராந்தியங்களுக்கு சென்றுள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயணம் மேற்கொள்வோர் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கமானது நேற்று காலை 05.30 அளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இன்று அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு, வட மேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வட மேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் கடும் காற்று வீசக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.