deepamnews
இலங்கை

ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு மிக விரைவில் முடிவு கட்டப்படும்-  கஜேந்திரகுமார் தெரிவிப்பு.

ராஜபக்ச தரப்பினரது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பினரது அரசியல் காலம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவைச் சில தினங்களுக்கு முன்னர் தெரிவு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் தனது பதவியேற்பு உரை நிகழ்த்தியபோது, போர் வெற்றிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுஜன பெரமுன கூட்டணியே காரணம் என்ற கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவர் சார்ந்த அணியோ இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு எதுவுமே  செய்யவில்லை என்பதுதான் உண்மை. பொருளாதார வளர்ச்சியின் பெயரில் அவர்களது காலத்தில் அவர்கள் முன்னெடுத்த அனைத்து வேலைத்திட்டங்களுமே நாட்டைக் கடனுக்குள் தள்ளியுள்ளது.

குறிப்பாக நாட்டை சீனாவின் கடன் பொறிக்குள் தள்ளி சீனாவை இலங்கை விவகாரங்கள் தொடர்பாக தவிர்க்க முடியாத தரப்பாகக் கொண்டுவந்து நிரந்தரமாக இலங்கையில் பிடி ஒன்றை வைத்திருப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதற்குத்தான் ராஜபக்ஷ தரப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்ற பேரிலே நடத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் அமைந்தன.

அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பு தாமரைக் கோபுரம், கொழும்புத் துறைமுக நகரம் என அனைத்துமே முழுக்க முழுக்க நாட்டினுடைய அபிவிருத்தி என்கினற நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் அல்ல.

மாறாக இந்த வேலைத்திட்டங்களினூடாக இலங்கை சீனாவுக்குக் கடன் பட்டு முழுமையாகத் தவிர்க்க முடியாத சக்தியாக இடம்பெறுவதற்குச் சீனாவுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமையே உண்மை. குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் இன்று நாட்டுக்குச் சுமையாக இருக்கின்றனவே தவிர டொலர் வருமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்ற திட்டங்கள் அல்ல.

உண்மை இதுவாக இருக்கின்றபோது, தான் ஒரு புதிய பதவியை எடுத்ததால் இவ்வாறு கூறினால் மக்கள் அதை நம்புவினம் என்ற அடிப்படையில் அவர் இதனைக் கூறியதாகவே பார்க்கின்றோம். மக்கள் இந்த உண்மைகளை உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் 5 வருடங்கள் ஆணை கொடுத்திருந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டி அடித்திருந்தனர். அதற்கு முன்னதாக பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவையும் வீட்டுக்கு அனுப்பியிருந்தனர்.

ஆகவே, மக்களின் நிலைபற்றி பொதுஜன பெரமுன தரப்புக்கு விளங்கவில்லை என்றால் அவர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் அனைத்து மக்களும் தெளிவான பதிலை வழங்குவார்கள். – என்றார்.

Related posts

கைக்குழந்தையுடன் இலங்கையர்கள் தர்ணா போராட்டம்

videodeepam

புது டில்லி பயணமாகும் ரணில்!

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

videodeepam