மியன்மாரில் இருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் நேற்று மாலை தமிழகத்தில் சிக்கியுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட இரண்டு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
56 கிலோகிராம் எடையுள்ள குறித்த போதைப்பொருள், மியன்மாரில் இருந்து கடல் வழியாக இந்தியாவின் மணிப்பூருக்குக் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து தமிழ்நாடு – சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னையின் ஊடாகக் கடல் கரைக் கிராமத்தின் ஊடாக இலங்கைக்குக் கடத்தும் ஏற்பாட்டின்போதே கைப்பற்றப்பட்டுள்ளது.
மெத்தம்பெட்டமைன் ரகத்தைச் சேர்ந்த இந்தப் போதைப்பொருளின் இலங்கை ரூபா பெறுமதி ஆயிரம் கோடி எனவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்க் கடத்தல்காரருடன் இந்தியாவின் ஒரு பிரபல கடத்தல்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் மத்திய அரசின் கீழ் உள்ள சுங்கத் திணைக்களத்தின் கீழேயுள்ள டி.ஆர்.ஐயினரே இந்தப் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.