ஜே.என் 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் 19 வைத்தியசாலைகளில் இது தொடர்பான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜே.என். 1 ஒமிக்ரோன் உப வைரஸ் திரிபு உலகின் 41 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், மிகவும் வேகமாக பரவி வருகின்றது.
இந்த வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானோருக்கு தொடர்ச்சியான இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு, அதிக காய்ச்சல், சோர்வு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாட்டில் மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.