deepamnews
இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் – டீ.பி ஹேரத் தெரிவிப்பு.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருள்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரையும் பாதுகாக்கும் முறைமையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.”

– இவ்வாறு கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் இதனைத் தெரிவித்தார். இதனோடு அவர் மேலும் தெரிவிக்கையில் –

“விவசாய அமைச்சின் ஊடாக நெல் கொள்வனவு செய்வதற்கான சூழல் தற்போது தயாராகியுள்ளது. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல ஒரு முறைமை தயாராகி வருகிறது. அண்மைய காலமாக காய்கறிகள், பழங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. விவசாய அமைச்சு என்ற வகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை பழைய நிலைக்கு கொண்டுவர முடிந்தது.

அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் புரதத் தேவைக்காக இறைச்சி மற்றும் முட்டைகளை உற்பத்தி செய்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசியப் பொருள்களைத் தட்டுப்பாடு இன்றி நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் விவசாயக் கொள்கை மூலம் நுகர்வுக்கு தேவையான அரிசியை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

இதன்படி அடுத்த மாதம் 6 ஆம் திகதி தேசிய புத்தரிசி விழாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஸ்ரீ மஹா போதி முன்னிலையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.”  – என்றார்.

Related posts

இது மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும்  – ஜனாதிபதி

videodeepam

அரசியல் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி

videodeepam

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் இணைந்த கோட்டாபய ராஜபக்ச  –  முக்கிய தகவல் கசிந்தது !

videodeepam