2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல் நோர்டிக் நாடுகள் இதில் வெகுவாக இடம்பெற்றுள்ளன.
டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுடன் ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து ஆகிய தீவுகளை உள்ளடக்கிய பகுதி நோர்டிக் பிராந்தியமாக அறியப்படுகிறது.
இந்த நோர்டிக் பிராந்திய நாடுகள் முதல் இடம்பெற்றுள்ளன. இஸ்ரேல் 5 ஆவது இடத்தில் இருக்க, இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126 ஆவது இடத்தில் உள்ளது.
ஐ.நா.வின் ஆதரவோடு ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் இந்த உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.
டென்மார்க், ஐஸ்லாந்து 2 மற்றும் 3 ஆம் இடங்களைப் பிடிக்க, ஸ்வீடன் 4 ஆவது இடத்தில் உள்ளது. இஸ்ரேல் 5 ஆவது இடத்தில் இருக்கிறது.
143 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் கடைசி இடத்தை (143 ஆவது இடம்) பிடித்துள்ளது ஆப்கானிஸ்தான். அங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் இந்த அறிக்கையில் முதன்முறையாக அமெரிக்காவும், ஜேர்மனியும் முதல் 20 பட்டியலில் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 23 ஆம் இடத்திலும், ஜேர்மனி 24 ஆவது இடத்திலும் இருக்கின்றன. மாறாக கோஸ்டாரிகா, குவைத் போன்ற நாடுகள் முத்த 20 பட்டியலுக்கு முன்னேறியுள்ளன. குவைத் 12 ஆவது இடத்திலும், கோஸ்டாரிக்கா 13 ஆவது இடத்திலும் உள்ளன.