இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள் அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்க்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நலன்புரி நன்மைகள் சபையின் (www.wbb.gov.lk) இணையத்தளத்தில் இருந்து எவரும் உரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் ஊடாக தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் உள்வாங்க எதிர்பார்க்கின்றோம்.
நலன்புரி நன்மைகள் சபையின் மூலம் தகுதியான அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கொடுப்பனவுகளை குறைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக சிலர் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர்.தற்போது நலன்புரித்திட்ட உதவிகள் பெறும் குழுக்களையும், நலன்புரித்திட்ட உதவிகளுக்காக காத்திருக்கும் குழுக்களையும் சரியான முறையில் உள்வாங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நாம் விரைவில் செயல்படுத்துவோம். இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து தகவல்களையும் சேகரித்து, தேவையான, பொருத்தமான மற்றும் சரியான முறையில் கொடுப்பனவை வழங்க இருக்கிறோம்.யாரையும் விட்டு விடாமல் இந்த கொடுப்பனவு வழங்க வேண்டும் என்ற தேசியப் பொறுப்பில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.தற்போது பொது உதவி, நலன்புரித்திட்ட உதவிகள் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை பெறும் பலர் உள்ளனர். அவர்கள் பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
தற்போது குறைந்த அளவிலான பயனாளிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதனால்தான் பதிவு காலத்தை நீடித்திருக்கிறோம். இதனை மேலும் நீடித்தால் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்குவது இன்னும் தாமதமாகும்.எனவே இதை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு நமக்கு ஒரு தரவு கட்டமைப்பொன்று அவசியமாகிறது.விண்ணப்பங்களைப் பெற்று தரவு கட்டமைப்பொன்றை தயாரிக்க இருக்கிறோம். தற்போது உதவித்தொகை பெறுபவர்களும் கட்டாயம் தங்களை பதிவு செய்ய வேண்டும். இதை வெளிப்படைத் தன்மையுடன் செய்ய தரவு கட்டமைப்பை தயாரித்துள்ளோம். கிராமத்து இளைஞர்களுக்கும் இதில் பெரும் பொறுப்பு உள்ளது.
கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இந்த திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்த முடியும். முதியவர்கள், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்கள் கிராமங்களில் வாழ்கின்றன. அவர்கள் அனைவரையும் இந்தத் தரவுக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கி அவர்களின் நலன்களை கவனிக்க நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்க்கிறது.விண்ணப்பம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்று குறித்த குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
பின்தங்கிய குடும்பங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையொன்றும் ஆரம்பிக்கப்படும். அதன்படி, அவை தரவு கட்டமைப்பில் சேர்க்கப்படும். இந்த செயல்பாட்டின் கீழ் தெரிவுசெய்யப்படாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய முடியும்.
தகுதியற்ற ஒருவர் இதில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சேபனை முன்வைக்க முடியும். யாருடைய கொடுப்பனவுகளையும் குறைப்பதற்காக இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. வெளிப்படையான முறையில் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.