பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திற்கு பிரதான ஆளும் கட்சி தடையாக செயற்பட்டதாலேயே சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி முழுமையாக தடைப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
பொருளாதார பாதிப்பிற்கு யார் காரணம் என பரிசோதனை நடத்தாமல் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்துவது காலத்திற்கு பொருத்தமானதாக அமையும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்ட வேண்டும்.
பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொறுப்புடன் செயற்பட்டார்.
தற்போதைய ஜனாதிபதியும் பொறுப்புடன் செயற்பட்டார். ஆனால் ஆளும் கட்சியினர் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் துரதிஸ்டவசமாக சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி முழுமையாக தடைப்பட்டது என்று தெரிவித்தார்.