ஐந்து வருட திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
வவுனியா நகர சபையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, வட மாகாணத்தின் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாகவும் இதனடிப்படையில், வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்காக வட மாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.