கொள்கை வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் குறித்த தீர்மானம் பொருத்தமான நடவடிக்கை எனவும், பணவீக்க இலக்குகளின் கீழ் அமைக்கப்பட்ட தமது நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இது அமைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத்தின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, இலங்கைக்கான செயற்றிட்டத்தின் பிரதானி Masahiro Nozaki ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பணவீக்கத்தின் வீதம் குறைவடைந்து வருகின்ற போதிலும், வறிய மக்களை பாதிக்கும் வகையில் தற்போதும் உயர் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கம் நடப்பு போக்கினை மாற்றியமமைக்கக்கூடும் என்பதுடன், பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், கொள்கை வட்டி வீதத்தை அதிகரித்தமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, பணவீக்கத்தை விரைவாகக் குறைக்கும் மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை வௌிப்படுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், ஒற்றை இலக்க பணவீக்கத்தை நோக்கி உறுதியாக நகர்வதை இது எடுத்துக்காட்டுவதாகவும் நாணய நிதியம் கூறியுள்ளது.
உறுதியான பணவீக்க வீழ்ச்சியானது சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க உதவிபுரியும் என்பதுடன், பாரிய வணிக நிறுவனங்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்குமான நிதி நிலைமைகளை இலகுபடுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.