அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக 4 மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.
இதன்படி, மேல், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நேற்று காலை 8 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதனால் அந்த மாகாணங்களில் அமைந்துள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
எனினும் சிறுவர் வைத்தியசாலைகள், மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சைப் பிரிவுகள் போன்றவற்றில் வேலை நிறுத்தம் நடைபெறவில்லை.
இதன்படி கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இன்றும் (14ம் திகதி) வடமேற்கு, வடமத்திய, வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இந்த வைத்திய பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்புடன், துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் வங்கி ஊழியர்களும் கறுப்பு ஆடை அணிந்து கடமையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டி விகித உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் சங்கம், நேற்று முதல் இந்த வாரம் போராட்டங்கள் மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சமீபத்தில் முடிவு செய்தது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து விஜேராம சந்தி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பேரணியாகச் சென்றனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் துறைமுகம், மருத்துவம், தாதியர், நீர், மின்சாரம், ஆசிரியர் அதிபர், வங்கி ஆகிய துறைகளும் இணைந்து கொள்ளவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக எழுத்துமூல அறிவித்தல் நேற்றய தினம் அரச நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.