சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலை இலங்கை பெற்றுள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டில் ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி தொடர்பில், நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைத்துள்ள நிலையில், இலங்கை ஏற்கனவே பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே, மறுசீரமைப்பின் பின்னரே கடன் செலுத்தல் காலம் தொடர்பில் கூறமுடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதிய உதவி விடயத்தில் எடுத்த பிரசித்தமற்ற தீர்மானத்தைப் போன்று தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் பிரசித்தமற்ற தீர்மானம் எடுக்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், குறித்த விடயம் நாடாளுமன்றின் இணக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேநேரம், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற கூற்று தொடர்பில் கருத்துரைத்த அவர், அது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.