கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் எரிபொருள் விநியோகிக்கும் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்து ஊழியர்களை அச்சுறுத்தியதாக அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தின் செயற்பாடுகளுக்கு சேதம் விளைவிக்க முயற்சிக்கப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்தவர்களில் தொழிற்சங்கத்தினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி தற்போது விடுமுறையிலுள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களும் அடங்குவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களது செயற்பாடுகளால் எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டதுடன், எரிபொருள் வரிசைகளும் ஏற்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்டுள்ள நட்டத்தை குறித்த நபர்களிடமிருந்தே அறவிடுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.