230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அடுத்த வாரமளவில் வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும், இதனூடாக குறிப்பிடத்தக்க இலாபம் எதுவும் கிடைக்கவில்லை.
அத்துடன், எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதனைக் கருத்திற் கொண்டு வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படுவதில்லை.
எவ்வாறாயினும் அடுத்த வாரமளவில் வெதுப்பக உற்பத்தியில் நிவாரணத்தை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, பொருட்களின் விலைகளை குறைக்காமை மற்றும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில், ஹட்டன் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு எதிர்பை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.