மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு முறையான சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய வடிவேல் சுரேஷ், மலையக மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி நல்ல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்குமாக இருந்தால் எமது பூரண ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்க தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
அத்துடன், மலையக மக்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும், கூட்டு ஒப்பந்தம் ஊடாகவோ, சம்பள நிர்ணய சபையின் ஊடாகவோ சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கு முகம்கொடுக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து 3250 ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியையும் வலியுறுத்தியுள்ளதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கம் நல்ல திட்டங்களை செயற்படுத்தி, பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து மலையக மக்களை உள்வாங்கி அவர்களுக்கும் நிவாரணங்களை வழங்கினால், மலையக மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.