ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பலவீனப்படுத்த கட்சிக்குள்ளே சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் கட்சியை மறுசீரமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கட்சியில் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சாகர காரியவசம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தொடர்ந்து செயற்படுவோம் என தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தியதை போன்று தற்போது பொதுஜன பெரமுன கட்சியை பலவீனப்படுத்த கட்சிக்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்து சவால்களையும் நிச்சயம் முறியடிப்போம்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம்.
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை கட்சி கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.