இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை தவறாக பொருளுணர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தற்போதைய நிலைமையை விட எதிர்காலத்தில் பாரிய சவாலான நிலையை அடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அவ்வாறு தெரிவிக்கவில்லை என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கைக்கு அமைய இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்தை விட தற்போது ஸ்திரதன்மையை அடைந்துள்ளதாகவே மத்திய வங்கியின் ஆளுநரால் முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்பார்க்கப்படும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்டால் பொருளாதாரம் பலவீனமடையும் என்பதோடு, பொருளாதார மீட்சிக்கும் பாதிப்பு ஏற்படும் என மத்திய வங்கியின் ஆளுநரால் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எனினும், குறித்த தகவல் திரிபுபடுத்தப்பட்டு தற்போது வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் எதிர்காலத்தில் வீழ்ச்சியினை சந்திக்கும் அல்லது சவாலை எதிர்கொள்ளும் என திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.