deepamnews
இலங்கை

கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு – முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு

கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்பிற்கான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியுடன் விலை அதிகரிக்கப்பட்ட   எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்டதுடன், சதொசவில் 500-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டன.

எவ்வாறாயினும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் 1100 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம்  கோழி இறைச்சியின் விலை இன்று 1400 ரூபா தொடக்கம் 1600 ரூபா வரை அதிகரித்துள்ளது.

குருநாகல் – ஹொரம்பாவ பகுதியில் 1500 ரூபா தொடக்கம் 1600 ரூபாய் வரை ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி  விற்பனை செய்யப்படுகின்றது.

மாத்தளை, அம்பாறை உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1400 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

எனினும், ஒரு கிலோகிராம்  கோழி இறைச்சியின் நிர்ணய விலை 1300 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.

1300 ரூபாவை விட அதிக விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பண்டிகைக்காலத்தில்   கோழி இறைச்சியை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே சந்தையில் முட்டைக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

வெள்ளை முட்டையை  44 ரூபாவிற்கும் சிவப்பு முட்டையை 46 ரூபாவிற்கும் விற்பனை செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் வர்த்தமானி ஊடாக அறிவித்திருந்தது.

எனினும், ஒரு சில இடங்களில் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு மேலதிகமாக முட்டையை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு   எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல கூறினார்.

நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டையை விற்பனை செய்த 9 வர்த்தகர்களுக்கு அங்குணுகொணபெலஸ்ஸ நீதிமன்றம் கடந்த 5 ஆம் திகதி 9 இலட்சம் ரூபா அபராதம் விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். முதல்வர் தெரிவு குறித்து சிறீதரன் எம்.பி கருத்து

videodeepam

சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ள மாட்டேன் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.

videodeepam

மோடியை ஒன்றாகச் சேர்ந்து சந்திக்க முயல்வோம் வாருங்கள்…! தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு.

videodeepam