இலங்கைக்கான நிதியுதவிச் செயற்திட்டம் தொடர்பில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவை உள்ளடக்கிய செயற்திட்டத்தின் அடிப்படையில் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப்பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்திக்கான நிதியிடல் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஷெஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
கொவிட் – 19 பெருந்தொற்றின் பின்னரான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகள் இறுக்கமான நிதி மற்றும் நாணயக்கொள்கையை நடைமுறைப்படுத்திவருகின்றன.
இருப்பினும் அபிவிருத்தியடைந்துவருகின்ற அநேக நாடுகளால் அதனைச் செய்யமுடியாது என்பதுடன் அவை அதிகரித்த கடன்களாலும், உயர்வான வட்டிவீதங்களாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இலங்கையும் அண்மையகாலங்களில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்நிலையில் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டைத்தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவுடன்கூடிய செயற்திட்டத்தின் அடிப்படையில் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.
அதன்படி பொருளாதார மீட்சியை முன்னெடுத்திய கடினமான கொள்கைத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கு எமது அரசாங்கம் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.