டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார், ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்க எழுத்து மூலம் இதனை அறியப்படுத்தியுள்ளார்.
இதன்படி டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் 1896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இது 49 சதவீதமாகும் எனவும் தெரியவந்துள்ளது.
தற்போது டெங்கு வைரஸின் 2 ஆம் மற்றும் 3 ஆம் திரிபுகள் அதிகளவில் பதிவாகியுள்ளன என்றும் 14 வருடங்களின் பின்னர் டெங்கு வைரஸின் 3 ஆவது திரிபு பரவுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால், டெங்கு நோய் பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்