14 ஆவது தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வுகள் பத்தரமுல்லையில் உள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகே நடைபெற்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து, நாடளாவிய ரீதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வருகையை அடுத்து நிகழ்வு ஆரம்பமானதுடன், படை வீரர்கள் மற்றும் உயிரிழந்த படையினரின் உறவினர்கள் நினைவுத்தூபிக்கு அருகே ஒன்று கூடினர்.
நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவும் கலந்து கொண்டிருந்தார்.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை, விமானப் படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.