வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக வருகை தரவுள்ளவரை நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது,
வேலணை மத்திய கல்லூரிக்கு வட மாகாண கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வு அடிப்படையில் புதிய அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், எமது பாடசாலை 80 வருட கால இந்து பாரம்பரியத்தை கொண்ட பாடசாலையாகக் காணப்படுகின்ற நிலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் பிற மதம் ஒன்றை சார்ந்தவராக காணப்படுகிறார்.
எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். அத்துடன் திருக்கேதீஸ்வர திருவிழாவையும் நாங்கள் எங்களது பாடசாலையில் முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் பாடசாலைக்கு வருகை தரும் அதிபர் எமது மத சம்பிரதாயங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் குறைந்தவர் ஆகையால் அவரை மாற்றி இந்துப் பாரம்பரியங்களைக் கொண்ட அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அச்சுறுத்தி போராட்டத்தை கலைக்க முற்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸாரும் ஆசிரியர்களுக்கு சார்பாக நடந்து கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களால் கூறப்பட்டது.